இலங்கயின் கூட்டரசு வாக்குறுதி அளித்த எந்த விடயமும் வடக்கில் செயற்படுத்தப்படவில்லை எனவும், அதன் தாக்கமே விஜயகலா மகேஸ்வரனின் உரையில் இடம்பெற்றிருந்தது என்றும், எனவே கூட்டரசுதான் இதற்குப் பொறுப்புக்கூறவேண்டும் எனவும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத்சாலி தெரிவித்துள்ளார்.
தற்போதய அரசு அதிகாரத்துக்கு வந்து 3 ஆண்டுகளாகியுள்ள போதிலும், சிறுபான்மை மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் இன்னும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதையும், வடக்கில் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளில் ஒரு தொகுதியையேனும் கடுமையாகப் போராடியே பெற்றுக்கொள்ளமுடிகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் இருக்கும் சில இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் காரணமாக அங்குள்ள தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளனர் எனவும், பெண்கள் தனிமையில் பயணம் செய்யமுடியாத நிலை மற்றும் சிறுவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லாத நிலை என்பன குறித்தே இராஜாங்க அமைச்சர் விஜகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களுக்குப் பயந்தேனும் இவ்வாறான வன்முறைச்சம்பவங்கள் அன்று இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ள அசாத் சாலி, புலிகளின் காலத்தில் வடக்கு மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்று யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வென்றில் விஜகலா தெரிவித்த விடயங்கள் உண்மையானவை என்றும் விபரித்துள்ளார்.
வடக்கில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த அவிருத்திகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், இதனால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் விரக்தியினால் தான் விஜயகலா விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்கவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.