ஒன்ராறியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற தமிழ் இளைஞரின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒன்ராறியோவின் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த குறித்த இந்த தமிழ் இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தனது நண்பர்களுடன் கடலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பார்த்தீபன் கடலில் தவறி விழுந்ததாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒருமாத கால தீவிர தேடுதலின் பின்னர் அவரின் சடலத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து பார்த்தீபனின் உறவினர்களுக்கு காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அவரது இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் 8 ஆம் நாள் நடைபெறும் என்று குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். கைதடியைப் பிறப்பிடமாக கொண்ட பார்த்தீபன் சுப்ரமணியம், தனது பத்து வயதில் கனடாவுக்கு வந்திருந்தார் என்பதுடன், இசைத்துறையில் கலைஞராக செயற்பட்ட பார்த்தீபன் சுப்ரமணியம் கனடாவில் அதிக தமிழர்களால் நன்கு அறியப்பட்ட ஒருவர் என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.