கனடாவின் புகலிடக் கோரிக்கையாளர்கள் கொள்கை மற்றும் செயற்பாட்டினை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கும் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட்டுக்கும் இடையே இன்று பிற்பல் ரொரன்ரோவில் சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில், அதன் பின்னர் கருத்து வெளியிடும்போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களைக் கையாள்வது தொடர்பில் கனடாவுக்கு என்று சில அனைத்துலக கடப்பாடுகள் உள்ளதாகவும், அதனை டக் ஃபோர்ட் முழுமையாக புரிந்து வைத்திருக்கவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவை குறித்து டக் ஃபோர்ட்டுக்கு விளக்கியதாகவும், அத்துடன் இந்த விடயத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தை அவருக்கு வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவில் வீட்டுவிலை அதிகரிப்பு உள்ளிட்ட நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக எல்லைதாண்டி வரும் மக்களாலேயே இவ்வாறான நிலை ஏற்படுவதாக, இந்த சந்திப்புக்கு சற்று முன்னதாக ஒன்ராறியோ மாநில அரசு மத்திய அரசினைக் குற்றஞசாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.