தேசத்தின் புயல்களான கரும்புலி மறவர்கள் இன்று தாயகமெங்கும் நினைவுகூரப்பட்டுள்ளனர்.
1987ம் ஆண்டின் இதே நாளன்று நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலி தாக்குதல் நடாத்தப்ப்டடமை குறிப்பிடத்தக்கது.
கரும்புலி கப்டன் மில்லர் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த நெல்லியடி மண்ணில் இன்று மதியம் நினைவுகூரல் இடம்பெற்றிருந்தது.
சிறிலங்கா ஆக்கிரமிப்பு படை முகாம் மீது தாக்குதலை நடத்திய கரும்புலி மில்லர் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்ட நினைவுதூபி சிறிலங்கா படைகளால் அழிக்கப்பட்டுள்ள நிலையில், கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் இன்று சுடரேற்றி நினைவு வணக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கரும்புலி மில்லரின் சகோதரி சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
இதேவேளை வல்வெட்டிதுறை மண்ணிலும் கரும்புலி நாள் நினைவு மிகவும் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டிதுறையில் அமைக்கப்பட்டிருக்கின்ற மாவீர்ர் சங்கரின் நினைவிடத்தில் தாயக விடுதலைப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு மிக உணர்வு பூர்வமாக கரும்புலிகளின் நினைவு நாள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல யாழ் பல்கலைக்கழகத்திலும் இன்று இரவு கரும்புலிகள் நாள் நினைவுகூரல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில், இன்று இரவு 6.05 மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு தேசத்தின் புயல்கள் நினைவுகூரப்பட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி தாயகத்தின் பல்வேறு இடங்களிலும், புலம்பெயர் தேசம் எங்கும் இன்று கரும்புலிகள் நாள் மக்களது பங்கெடுப்புடன் அமைதியாக நினைவு கூரப்படுகின்றது.