உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.
இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் – பெல்ஜியம் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தனக்கு கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை கோலாக மாற்றவில்லை.
ஆனாலும், ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கணக்கில் பிரேசில் பின்தங்கியது.
ஆட்டத்தின் இறுதிவரை யாரும் கோல் அடிக்காததால் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.