கனடாவில் அண்மைய நாட்களாக அதிக அளவு வெப்பம் நிலவிவந்த நிலையில், கியூபெக்கில் மட்டும் அதி வெப்பத் தாக்கத்தினால் குறைந்தது 54 பேர் உயரிழந்துள்ளனர்.
கடந்த ஆறு நாட்களில் மட்டும் இந்த 54 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், இவர்களில் 28 பேர் மொன்றியலில் உயிரிழந்ததாகவும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கியூபெக்கின் தென் பிராந்தியங்களை கடுமையாக தகாக்கிய அதிக வெப்பத்தின் அளவு தற்போது தணிந்துள்ள போதிலும், நேற்று வியாழக்கிழமை மட்டும் அங்கு குறைந்தது 10 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிக வெப்பம் காரணமாக, குறிப்பாக கட்டிடங்களினுள் வேகமாக அதிகரிக்கும் வெப்பம் காரணமாக, வயதானவர்கள் மற்றும் தீராத நோயுள்ளவர்கள் கடும் பாதிப்பினை எதிர்கொள்ளக்கூடும் என்ற நிலையில், இவ்வாறான உயிரிழப்புகள் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்று கியூபெக் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்தவர்களில் அனேகமானோர் 65 வயதுக்கும் அதிகமானவர்கள் என்பதுடன், அவர்கள் உடல் அல்லது உள ரீதியிலான பாதிப்பினை ஏற்கனவே கொண்டிருந்தவர்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வெப்பநிலை குறைவடைந்துள்ள போதிலும், இந்த அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் தாக்கங்கள் 24 மணி நேரத்திலிருந்து 48 மணிநேரம் வரையில் ஏற்படக்கூடும் எனவும், எனவே இவை குறித்த மேலதிக தகவல்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் எனவும் கியூபெக் சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.