அரசுமுறை பயணமாக இந்தியா சென்றுள்ள தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன், டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தென்கொரியா அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்கு சென்றுள்ள மூன் – ஜே-இன் உடன் நடாத்திய இந்த ஆலோசனையில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்தியா மற்றும் தென் கொரியா இடையே வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தென் கொரிய வர்த்தக அமைச்சர் கிம் ஹியூன் சோங் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் இன்று கையெழுத்திட்டுள்ளனர்.
நேற்று மாலை டெல்லி வந்தடைந்த தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் உடன், அவரது மனைவி மற்றும் அந்த நாட்டின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோரும் இந்தியா சென்றுள்ளனர்.