முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் போஸ்டர்களில் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இதற்கு சமூகநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சுகாதாரத்துறை மூலமாக விஜய், முருகதாஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பேரில் அந்த போஸ்டர்கள் நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டன.
ஆனால் விஜய் ரசிகர்கள் இந்த பிரச்சினையை விஜய்க்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதுகிறார்கள்.
விஜய் புகைபிடிக்கும் படத்தை தங்களது சமூக வலைதளங்களில் முகப்பு படமாக வைத்து அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் வெளியான அசுரவதம், விக்ரம் வேதா, ஸ்கெட்ச், மாரி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், அருவி உள்ளிட்ட பல படங்களில் நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகள் போஸ்டர்களில் இடம்பெற்று இருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். மற்ற நடிகர்களுக்கு ஒரு நியாயம்? விஜய்க்கு ஒரு நியாயமா? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையே சுகாதாரத்துறை அதிகாரிகள் சர்கார் படத்தின் போஸ்டர்களை சமூக வலைதளங்களில் மீண்டும் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இதுபற்றி சுகாதாரத்துறை இணை ஆணையர் சோமசுந்தரம் கூறுகையில், ‘2003 ஆம் ஆண்டின் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் சட்டத்தின் அடிப்படையில் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் படக்குழுவின் சமூகவலைதள பக்கங்களில் நீக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. ஆனால் எங்களது இறுதி ஆய்வு புதன் அல்லது வியாழக்கிழமை முடியும். சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தை மீறி இருக்கிறார்களா என்று தெரிவதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும்’ என்றார்.
இதுகுறித்து சர்கார் பட தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவர் கூறும்போது, ‘விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை நாங்கள் நீக்கிவிட்ட பிறகும் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள். இதை எப்படி கட்டுப்படுத்துவது என்றே தெரியவில்லை’ என்றார்.
இதுபற்றி விஜய் ரசிகர்கள் கூறும்போது, ‘தீயதை பின்பற்றும் மனப்பக்குவமற்ற நிலையில் விஜய் ரசிகர்கள் ஒருபோதும் இல்லை. விஜய் சினிமாவில் புகைபிடிப்பதை ஸ்டைலாக பார்ப்பார்கள் அவ்வளவுதான். விஜய் சர்கார் படத்தில் சிகரெட் பிடிப்பதை சுட்டி காட்டியவர்கள் அவர் தூத்துக்குடி சென்று உதவியதை ஏன் சுட்டி காட்டவில்லை?’ என்றனர்.