நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருக மூர்த்தி ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட விமான குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் இன்று நினைவுகூரப்படுகின்றனர்.
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்து நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருக மூர்த்தி ஆலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது கடந்த 1995ம் ஆண்டு யூலை மாதம் 9ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட விமான குண்டு தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டதுடன் 360 பேர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
முன்னாள் அரசாட்சியாளர்களின் பணிப்புரையின் பேரில் நடாத்தப்பட்ட இந்த விமானத் தாக்குதலில் பலியெடுக்கப்பட்ட மக்களின் 23ம் ஆண்டு நினைவு நாளை இன்று ஈழத் தமிழனம் நினைவுகூர்கிறது.
முன்னோக்கிப் பாய்தல் எனப் பெயர் கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையை வலிகாமம் பகுதியில் தொடங்கிய சிறிலங்கா இராணுவத்தினர், பலாலியிலிருந்தும் அளவெட்டியிலிருந்தும் மிகக் கொடூரமான முறையில் எறிகணைத் தாக்குதல்களை மேற்கெர்ண்டிருந்தபோது, இடம்பெயர்ந்தது வந்து நவாலி தேவாலயப் பகுதியில் மக்கள் பெருமளவில் தஞ்சமடைந்திருந்த நிலையிலேயே அவர்க்ள மீது இந்த வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்மை குறிப்பிடத்தக்கது.
அநத வேளையில் இடம்பெயரும் மக்களுக்கான சேவையில் ஈடுபட்டிருந்த சில்லாலை பிரிவு மூத்த கிராம அலுவலரான பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளை, கிராம அலுவலர் செல்வி ஹேமலதா செல்வராஜா உள்ளிட்ட அரச சேவையாளர்கள் பலரும், மக்கள் தொண்டுப் பணியில் ஈடுபட்டு உணவு, குடிநீர் வழங்கி கொண்டிருந்த 48 தொண்டர்களும் அந்தந்த இடத்தில் துடிதுடித்து உயிர் இழந்தனர்.
அந்த வகையில் ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடுக்களில் ஒன்றாக பதிந்துள்ள இந்த நவாலிப் படுகொலை, தமிழர் பரந்துவாழும் பல்வேறு பகுதிகளிலும் இன்று நினைவுகூரப்படுகிறது.
இவ்வாறான நிலையில் போரை செய்தவர்களும் இனப்படுகொலையை புரிந்தவர்களும், தாம் இழைத்த குற்றங்களை மறைக்கவும் இனப்படுகொலைப் போருக்குப் புனிதம் கற்பிக்கவும் மிக எளிதாக நல்லிணக்கம் என்ற போலிப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்த போதிலும் எம் நெஞ்சில், எமது வரலாற்றில், எமது மண்ணில் பல நவாலிப்படுகொலைகளை உருவாக்கிவிட்டு, அவைகளுக்குப் பொறுப்புக்கூறாமல், மன்னிப்புக் கேட்காமல் பேசும் நல்லிணக்கம் என்பது மிக மிக போலியும் அநீதியுமானது என்பதே உண்மையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.