யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று யாழ்.மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் தர்ஷன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பலாலியில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது, யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இராணுவத்தின் பின்புலத்தில் தான் யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் பொய்யான செய்தி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆவாக்குழுவை சேர்ந்தவர்கள் என்று பலர் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுகின்றார்கள் எனவும், அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்போது எங்காவது இராணுவத்தினருக்கும் தமக்கும் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டோர் குறிப்பிட்டுள்ளார்களா எனவும் கேள்வி எழுப்பியுளள் அவர், எந்த ஆதாரத்தை வைத்து இராணுவத்தின் பின்புலத்தில் ஆவாக்குழுக்கள் செயற்படுவதாக கூறுகின்றனர் என்வும் விசனம் வெளியிட்டுள்ளார்.