தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீள உருவாக வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் செய்தி வெளியிட்ட தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த அதிகாரிகள் குழு பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு, வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.
விசாரணைகள் சாதாரணமாகவே அமைந்திருந்த போதிலும், அதிகாரிகளிடம் காணப்பட்ட அறிக்கைகள் மற்றும் விசாரணை விபரங்கள் சிங்கள மொழியில் அமைந்திருந்தமையால் அவற்றை வாசித்து அறிந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாக விசாரணைகளுககு முகம்கொடுத்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 02ஆம் நாள், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ள போதைப் பொருள் பாவணை மற்றும் சிறுமிகள் உள்ளிட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் கவலைவெளியிட்டதோடு, இந்த நிலை மாறவேண்டுமானால் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு ஒட்டுமொத்தமாக சிங்களத் தரப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளதுடன், விஜயகலா சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்களான தலதா அதுகோரல, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகிய நால்வர் அடங்கிய குழு ஒன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை விஜயகலா மகேஸ்வரன் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்ட இலண்டன் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.