இந்தியாவில் மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சிக்காலம் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக பாரதிய ஜனதாக் கட்சி தயாராகி வருகிறது.
இதற்காக மாநிலந்தோறும் அந்த கட்சியின் தலைவர் அமித் ஷா சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், இன்று சென்னைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடாத்தியுள்ளார்.
இதன் போதே மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பதாகவும், இது தமக்கு வேதனையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊழல்கள் அனைத்தும் களையப்படும் சட்டம் ஒழுங்கு முறையாகக் கையாளப்பட்டு பிரச்சினைகள் சரிசெய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக்தில் புதிய நண்பர்களுடன் கூட்டணி ஏற்பட்டால், தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்கும் எனவும், இதற்குத் தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்றும் சென்னையில் கட்சியின் நிர்வாகிககள் முன்னிலையில் இன்று பேசிய பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.