கனடாவில் இந்த ஆண்டின் இதுவரையான ஆறு மாத காலத்தில் மாத்திரம் 78 பெண்களும் சிறுமிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் பெண்கள் படுகொலை மற்றும் நீதிக்கான அமைப்பு ஒன்று இன்று பெயர் விபரங்களுடன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 78 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளமை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் உள்வீட்டு தகராறுகள் காரணமாகவே பெண்கள் மற்றும் சிறுமிகளின் கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறு இடம்பெறும் படுகொலைகள் முழுமையாக வெளிப்படுத்தப்படுவதில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எனினும் வெளிவந்துள்ள கொலைகளில், அதிகளவானவை ஒன்ராறியோவிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கு அடுத்த நிலைகளில் கியூபெக், மனிட்டோபா, அல்பேர்ட்டா ஆகிய மாநிலங்கள் உள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.