வட மாகாண சபை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் விவாதிப்பதற்காக எதிர்வரும் 16ஆம் நாள் வடமாகாண சபையில் சிறப்பு அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், டெனீஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்ற நிலையில், அவருக்கான ஆசன ஒதுக்கம் குறித்த சிறப்புரிமை பிரச்சினை இன்றைய சபை அமர்வின்போது எழுப்பப்பட்டது.
வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் இந்த சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த நிலையில் இதற்கு பதில் வழங்கிய முதலமைச்சர், மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் முறையீடு செய்திருப்பதாகவும், அதற்கான தீர்ப்பு வரும்வரையில் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், அதிகாரப் பகிர்வு மற்றும் ஒற்றை ஆட்சி குறித்த சந்தேகங்களும் தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் முதலமைச்சரின் பதிலில் திருப்தி அடையாத சயந்தன் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள், தொடர்ந்தும் இந்த விடயத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்ற தீர்ப்போ அல்லது இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளுநர் தரப்பின் அறிவுறுத்தல்களோ தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று அவைத் தலைவர் சிவஞானம் கூறியுள்ளார்.
இறுதியாக 19 மாகாண சபை உறுப்பினர்களின் கைச்சாத்துடன், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வலியுறுத்தி, அவைத் தலைவரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதனையடுத்து, அது குறித்து விவாதிப்பதற்காக எதிர்வரும் 16ஆம் நாள் சபையில் சிறப்பு அமர்வை நடத்துவதாக அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.