மன்னாரில் அரச விற்பனை நிலையமான சதொச வளாகத்தின் முகப்புப் பகுதி முன்னரைவிட மேலும் அகலப்படுத்தி ஆழப்படுத்தி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன்போது சிதறிய மனித எச்சங்கள் இருந்தமை கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன என்பதுடன், முகப்புப் பகுதியில் இன்னும் அதிகளவான மனித எச்சங்கள் காணப்படலாம் என்று பணியிலுள்ள குழுவினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுவரையான அகழ்வின்போது கிடைத்த பகுதியளவான மற்றும் முழுமையான மனித எச்சங்களை உரிய ஒழுங்கில் அங்கிருந்து அகற்றும் பணிகள் நிறைவடைகின்ற நிலையில், நேற்றைய அகழ்வின் போதும் சில எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன என்பதனால், முகப்புப் பகுதியை மேலும் ஆழப்படுத்தி அகழ்வு செய்வதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதுவரையான அகழ்வின்போது 30க்கும் மேற்பட்ட முழுமையான, மற்றும் பகுதியளவான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை குறித்த வளாகத்திலே சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டு சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நீதிவான் பிராபாகரனின் மேற்பார்வையில், சட்ட மருத்துவ நிபுணர் ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றுவரும் இந்த அகழ்வுப் பணிகளில், அவருடன் களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ்சோமதேவாவும் அவரது குழுவினரும் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.