வடமாகாணத்தில் உள்ள தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு தொல்லியல் திணைக்களம் தமிழர் வரலாற்றை அழித்து பௌத்த மத திணிப்பை செய்து கொண்டிருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் கிடடத்தட்ட 82 இடங்களை தொல்லியல் திணைக்களம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அடையாளப்படுத்தி, அந்த இடங்களில் உள்ள தமிழ் மக்களின் தொல்லியல் சான்றுகளை அழித்து, பௌத்த மத திணிப்பை செய்து வரும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் நேற்று நடைபெற்ற வடமாகாணசபையின் 126ஆவது அமர்வில் பிரேரணை ஒன்றை சபைக்கு கொண்டுவந்தார்.
குறித்த பிரரேரணையை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துளள அவர், நீராவியடி ஏற்றத்தில் பழமை வாய்ந்த பிள்ளையார் கோவில் இருந்ததாகவும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இதற்கு எதிர்ப்பக்கமாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அதன்பேர்து பிள்ளையாரைச் சூழ சிறியளவிலான விகாரை, புத்தர் சிலை என்பன காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மிகவும் பெரியளவிலான குருகந்தராஜ மகா விகாரை என்ற விகாரையை அங்கு அமைக்கும் முயற்சி நடைபெறுவதாகவும், கடந்த 03ம் நாள் நில அளவைத் திணைக்களத்துடன் இணைந்து அளவீடு செய்து அபகரிக்கும் பாரியளவிலான எண்ணத்துடனான இவர்களின் முயற்சியை மக்களும் மக்கள் பிரதிநிதிகளுமாக இணைந்து தற்காலிகமாக தடுத்து நிறுத்தியதாகவுதம் அவர் தெரிவித்துள்ளார்.
போர் முடிவுற்ற காலப்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் சட்டத்தின் மூலமான இவ்வாறான செயல்களுக்கு உறுதுணையாக இலங்கையின் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய, 188ம் தொல்லியல் கட்டளைச்சட்டப் பிரிவின் கீழ் புராதனச் சின்னங்கள் அதி சிறப்பு வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முல்லைத்தீவில் குறிப்பாக முல்லைத்தீவு பிரதான பொதுச்சந்தை, ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம், மாந்தைகிழக்கு பூவரசங்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பத்திரகாளி அம்மன் கோவில், கரைதுறைப்பற்று பிரதேச குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவில் குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில் வளாகம், கரைதுறைப்பற்று பிரதேச குமுழமுனை கிராம அலுவலர் பிரிவில் ஆஞ்சநேயர் கோவிலை அண்மித்த இடங்கள் உள்ளிட்ட 8 இடங்களையும், இதேபோல் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் சுமார் 82 இடங்களையும் தொல்லியல் திணைக்களம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
புராதனச்சின்னங்கள் தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற போதிலும், இலங்கையின் வடக்கு, கிழக்கில் மட்டும் தொல்பொருள் திணைக்களம் தேசிய மரபுரிமைகள் அமைச்சின் மூலமாக புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படுதல் என்று சொல்லிக் கொண்டு, தமிழர்களின் தொன்மைகள் – தொன்மைச்சான்றுகள் அழிக்கப்படுகின்றன எனவும் அவர் குறற்ஞ்சாட்டியுள்ளார்.
ஒரு இனத்தினுடைய பழைமை வாய்ந்த இவ்வாறான சான்றுகளை அழித்து, பௌத்த ஆதிக்கங்களை தமிழர்கள் தொன்று தொட்டு வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நுழைக்கின்றார்கள் அல்லது திணிக்கின்றார்கள் எனவும், இதன் மூலம் ஒரு கட்டமைக்கப்பட்ட இன ஒடுக்கு முறை மற்றும் இன அழிப்பினை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை என்றும் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.