பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு இந்திய மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காங்கிரஸ் கடசியின் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் தம்மை சந்தித்த இயக்குநர் ரஞ்சித்திடம பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்வதில் தமக்கோ, குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இராமதாஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் ராஜிவ் கொலை வழக்கில் தொடர்பு இல்லை என்ற போதிலும், அவர்கள் 28 ஆண்டுகளாக சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் விபரித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதை அந்த வழக்கை புலனாய்வு செய்த மத்திய புலனாய்வுத் துறை, மேல்முறையீட்டு விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் ஆகியவை ஒப்புக்கொண்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
புலனாய்வின் போது, பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை தாம் திரித்து எழுதியதால்தான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல்,இந்த வழக்கின் புலனாய்வில் மத்திய புலனாய்வுத்துறை ஏராளமான குளறுபடிகளை செய்து இருந்ததாகவும், அதுகுறித்தெல்லாம் தீர்ப்பில் விரிவாக எழுதி அதனடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று தாம் நினைத்திருந்த நேரத்தில்,மத்திய புலனாய்வு அமைப்பை விமர்சிக்கக் கூடாது என்று மற்ற இரண்டு நீதிபதிகளும் கூறியதால்தான் தாம் அப்படி ஒரு தீர்ப்பை எழுதியதாக நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.
இவை தவிர 7 தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேறு என்ன ஆதாரம் தேவை என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், சட்டப்படி பார்த்தாலும், தர்மத்தின்படி பார்த்தாலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்களே என்றும் தெரிவித்துள்ளார்.
இவற்றின் அடிப்படையில் 7 தமிழகர்களையும் விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.