நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா இராணுவம் யாழ். கோட்டைக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண ஆளுநரின் யாழ். அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, கோட்டைக்குள் இராணுவம் அனுமதிக்கப்பட்டமை தொடர்பாக அவரிடம் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன எனவும், இவை தவிர பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இராமேஸ்வரத்திலும் பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை கட்டுப்படுத்த வேண்டுமானால் இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டிய தேவையுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே வடக்குக்கு இராணுவம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும், யாழ்.கோட்டையில் ஆரம்பத்தில் போர்த்துக்கேயரும் பின்னர் டச்சுக்காரர்களும் பின்னர் ஆங்கிலேயரும் இருந்த போதிலும், பின்னர் அவர்களைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவமும் பின்னர் விடுதலைப் புலிகளும் இருந்தனர் எனவும், இவ்வாறான நிலையில் தற்போது அங்கு இராணுவம் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் குடாநாட்டுக்குள் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதுடன், இந்தப் போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கடல் வழியாகவே 80 வீதம் வருவதாகவும், 10 வீதம் வானூர்தி மூலமும், 10வீதம் துறைமுகங்கள் ஊடாகவுமே நாட்டுக்குள் வருகின்றன என்றும், இதிலும் குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன என்றும் வடமாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.