ரொரன்ரோவில் துப்பாககிச் சூட்டுச் சம்பவங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் இன்று வெளியிடப்படவுள்ளது.
ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரி மார்க் செளன்டர்ஸ்(Mark Saunders) மற்றும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி ஆகியோர் இன்று அந்த திட்டங்களை வெளியிட்டு வைக்கவுள்ளனர்.
ரொரன்ரோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மிகவும் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தத் போதிய காவல்துறை வளங்கள் இல்லையா என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருவதனை அடுத்தே, இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
College Streetஇல் அமைந்துள்ள ரொரன்ரோ காவல்துறை தலைமை அலுவலகத்தில், இன்று காலை 8 மணிக்கு நடைபெறவுள்ள ஊடக மாநாட்டின்போது, துப்பாக்கி வ்னமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான இந்த வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்படவுள்ளது.
கடந்த சில நாட்களாக ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரிக்கும், ரொரன்ரோ காவல்துறை உத்தியோகத்தர்கள் சங்கத் தலைவருக்கும் இடையே இடம்பெற்றுவந்த வாதப் பிரதிவாதங்களை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.