அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தின் அரசை ஊழல் அரசு என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறப்பினருமான இல.கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்த அமித் ஷா இரண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இன்றுள்ள நிலையில் பாரதிய ஜனதாக் கட்சிக் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவே திட்டமிடுகிறது என்ற உண்மை நிலையையும், தேர்தலுக்குப் பின் அமைய உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சி குறித்தும் அவர் தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழகத்தில் ஏதோ ஒரு கட்சியோ, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசோ மட்டும் ஊழல் எனக் குறிப்பிடவில்லை என்றும், காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கூட்டணி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்றல்ல என்றும், அவர்களும் ஊழல்வாதிகள்; தேர்தலில் வாக்கு பெற பணம் தரும் விபரீதம் அதிலும் அதிகம் என்றும் அவர் விளக்கமளித்ததாகவும் இல கணேசன் விபரம் வெளியிட்டுள்ளார்.
அதனால் மாற்று என்பது தனிநபரோ, கட்சியோ, கூட்டணியோ அல்ல என்றும், ஆட்சியின் தன்மையும், நடைமுறையும் மாற வேண்டும் எனவும் அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
இன்றுள்ள ஊழல் மயமான நிலைக்கு, ஊழலற்ற நிர்வாகமே மாற்று என்பது தான் அமித் ஷா தெரிவித்த கருத்தின் விளக்கம் என்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.