பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதால் தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியுள்ளதாக மக்களவை துணைத்தலைவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தின் மூத்த உறுப்பினருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெறுவதாக அமித்ஷா கூறியதை ஏற்கமுடியாது என்றும், ஊழலை அவர் நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மீது தவறு இருந்தால் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவிக்கட்டும் என்றும், திராவிட கட்சிகளை என்றைக்கும் தேசிய கட்சிகளால் அழித்து விட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு 5 இலட்சம் கோடி கொடுத்ததாக அமித்ஷா கூறியுள்ளதாகவும், ஆனால் இதே காலகட்டத்தில் மத்திய அரசுக்கு 20 இலட்சம் கோடி வருமானம் சென்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மூன்று ஆண்டு காலம் தாமதப்படுத்தியதற்கு காரணம் கூறாத மத்திய அமைச்சர், மதுரையில் எய்ம்ஸ் அமைய தாங்களே காரணம் என கூறிக்கொள்வது ஏற்புடையதல்ல என்றும் மக்களவை துணைத்தலைவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தின் மூத்த உறுப்பினருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.