ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலையீட்டினால் இலங்கை பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகியுள்ள நிலையில், இலங்கையும் விலக வேண்டும் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விடுத்திருந்த கோரிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது ஒரு அர்த்தமற்ற கருத்து எனவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலையீட்டினால் இல்ஙகை பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டது என்றும், ஆனால் இந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாகவும், முன்னைய அரசாங்கம் இந்தச் சவால்களை எதிர்கொண்டு தோற்கடிக்கத் தவறி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது தாங்கள் இந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்டிருப்பதுடன், படிப்படியாக தடைகளைத் தாண்டிக் கொண்டிருப்பதாகவும், எனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்து இருந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் நவீன் திசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.