அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் மத்திய மாநில குடிவரவுத்துறை அமைச்சர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கனேடிய மத்திய குடிவரவுத்துறை அமைச்சர் அஹமட் ஹூசெய்னுக்கும், ஒன்ராறியோ மாநில குடிவரவுத்துறை அமைச்சருக்கும் இடையே இன்று இடம்பெற்ற பேச்சுக்களின் போதே இவ்வாறான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் கனேடிய விழுமியங்களுக்கு முரணான, ஆபததான முனைப்புகளை கைக்கொள்வதாக மத்திய குடிவரவுத்துறை அமைச்சர் மாநில அரனை வெளிப்படையாகவே இன்று சாடியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான மத்திய அரசின் நடவடிக்கைகளில் ஒன்ராறியோ மாநில அரசு தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும், அவ்வாறு தவறான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் மத்திய குடிவரவுத்துறை அமைச்சர் இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
பொதுவாக கனடாவுக்குள் உள்வாங்கப்படும் குடிவரவாளர்களுடன் இணைக்காது, தனியான ஒரு நடைமுறையின் கீழேயே புகலிடக் கோரிக்கையாளர்களை உள்வாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த இரண்டு நடைமுறைகளின் வேறுபாட்டையும் புரிந்துகொள்ளாது, குழப்பகரமான கருத்துகளை வெளியிட்டு வருவது பொறுப்பற்ற செயல் என்றும், ஒன்ராறியோ மாநில அரசினை அவர் சாடியுள்ளார்.