வங்காள தேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வங்காள தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினாவை இன்று சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னர் தமது கீச்சகப் பக்கத்தில் விபரம் தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சர், இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மற்றும் எல்லைப்பாதுகாப்பு குறித்த முக்கிய விவகாரங்கள் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரதமர் ஷேக் ஹசினாவை இந்தியாவிற்கு வருமாறு தான் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் யூலை 13ஆம் நாள் வங்காள தேசத்தை சென்றடைந்துள்ளதுடன், 15ஆம் நாள் வரை அங்கு தங்கியிருக்கும் நிலையில், நாளை அந்த நாட்டு உள்துறை அமைச்சரை அவர் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளின் பின்னர் இரண்டு நாடுகளின் உள்துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேச்சு நடாத்தும் தருணம் இது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.