கனேடிய மத்திய அமைச்சரவையை பிரதமர் ஜஸ்டின் ரூடோ எதிர்வரும் புதன்கிழமை மாற்றி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய மாகாய அரசுகளுக்கு இடையேயான உறவு நிலைகள் மாறி வருவதுடன், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கும் மத்திய லிபரல் அரசாங்கம் தயாராகிவரும் நிலையில், இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான தகவல்கள் இந்த வாரத்தின் ஆரம்பத்திலேயே வெளியாகியிருந்த போதிலும், அமைச்சரவை மாற்றங்கள் புதன்கிழமை அறிவிக்கப்படும் என்ற தகவலை, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
பொதுவாகவே தேர்தல் அண்மிக்கின்ற வேளையில், மீண்டும் தேர்தலில் நிற்காதோரை அகற்றிவிட்டு, அடுத்த தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோரை முன்னிறுத்தி அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இம்முறை பெரும்பாலும் தற்போதுள்ள அனேகமான அமைச்சர்களும் மீண்டும் 2019ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அமைச்சரவை மாற்றத்திற்கான காரணம் அதுவாக இருக்காது என்று கருதப்படுகிறது.
அந்த வகையில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுநிலை மாற்றங்களை ஈடுசெய்யும் வகையிலேயே எதிர்வரும் இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஆளும் லிபரல் கட்சியின் ந்டபாளர்களான, கத்தலின் வின் தலைமையிலான ஒன்ராறியோ லிபரல் அரசாங்கம் கடந்த மாதம் தோற்கடிக்கப்பட்டு, டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கடசி ஆட்சியமைத்து்ளளதுடன், பருவநிலை மாற்ற ஒப்பந்தங்கள், புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முனைகளில் மத்திய மாநில தரப்புகளிடையே முரண்பாடுகள் வலுத்துள்ள நிலையில், இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.