காணாமற் போனோர் அலுவலகத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்தும், அந்த அலுவலகத்தினால் நடத்தப்படும் அமர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமற் போனோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை அரசினால் நியமிக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மாவட்ட ரீதியாக காணாமற் போனோரின் உறவினர்களைச் சந்தித்து வருகின்ற நிலையில், இன்றையநாள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காணாமற் போனோரின் உறுவினர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் காணாமற் போனோரின் உறவினர்கள் வீரசிங்கம் மண்டபம் முன்னாள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எத்தனையோ குழுக்கள் அமர்வுகளை நடத்தியும் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இந்த அலுவலகத்திலும் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், அத்தோடு எம்மை ஏமாற்றுவதற்காகவே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதனை தாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று தெரிவத்து கதறியழுதும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது அனைத்துலகத்தை ஏமாற்றும் நடவடிக்கை என்று தெரிவித்து, தமது எதிர்ப்பினை பதிவு செய்து மண்டபத்தினுள் நுளைந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனையடுத்து, அவசர அவசரமாக அந்தப் பகுதிக்கு காவல்துறை தருவிக்கப்பட்டதுடன், அவர்கள் போராட்டகாரர்களிடமிருந்து அலுவலக பிரதிநிதிகளை காப்பாற்ற முற்பட்டிருந்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கண்ணீரால் வீரசிங்கம் மண்டபம் வந்திருந்த அதிகாரிகள் தர்மசங்கடத்தில் திண்டாடியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே முல்லைதீவு,திருகோணமலையில் தாமாக முனன்வந்து தமது எதிர்ப்பை பதிவு செய்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள், அமர்வு நடந்த கட்டடத்தொகுதிக்கு வெளியேயே போராட்டங்களை நடத்தியிருந்த போதிலும், இன்று யாழ்ப்பாணத்தில் உள்ளே புகுந்து அதிரடியாக தமது எதிர்ப்பை தெரிவித்த பின்னர் அமர்வை புறக்கணித்து வெளியேறியியுள்ளனர்.
இதேவேளை இந்தப்போராட்ட களத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தவிர்ந்த வேறு எவரும் எட்டிக்கூட பார்த்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.