ஜம்மு-காஷ்மீர் மக்கள் சனநாயக கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆபத்தான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதாக் கட்சி தனது ஆதரவை விலக்கியதை அடுத்து மெகபூபா முப்தி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு அங்கு தற்போது ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிறிநகரில் இன்று ஊடகவியலாளளருக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தங்கள் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆபத்தான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
1987ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின்னர் தங்கள் கட்சியை பிளவுப்படுத்த நினைத்த முயற்சியால்தான் சையத் சலாவுதீன் முஹம்மது யாசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகள் உருவானார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவ்வாறே இப்போதும் தங்கள் கட்சியை உடைக்க டெல்லியில் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
எல்லா குடும்பங்களில் உள்ளதுபோல் தங்கள் கட்சிக்குள்ளும் சில கருத்து வேறுபாடுகள் உண்டு என்றும், அது பேசி தீர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ள கஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, டெல்லியின் தலையீடு இல்லாமல் எந்த பிளவும் இங்கு ஏற்பட முடியாது என்றும் சாடியுள்ளார்.