மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை 38 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சதொச விற்பனை நிலையம் இருந்த பகுதியில், புதிய கட்டடத்தை அமைக்கத் தோண்டிய போது, மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கை பல வாரங்களாக நீடித்து வருகிறது.
இதன் போது பல எலும்புக்கூடுகள் முழுமையாகவும், சில பகுதியாகவும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 38 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மேலும் பெருமளவு எலும்புக் கூடுகள் அந்தப் பகுதியில் இருப்பதாக நம்பப்படும் நிலையில், போதிய வசதிகள் இல்லாமையால், புதைகுழியைத் தோண்டும் பணிகள் மிக மெதுவாகவே இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை மன்னார் மனித புதைக்குழி தொடர்பில் நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியுடன் கலந்துரையாடி வருவதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவரான சனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பான வழக்கில் பங்கேற்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்கள் குறித்த பகுதியை பார்வையிட்டுள்ளதுடன், அந்தப் பணிகளுக்காக சட்டத்தரணி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மனித புதைக்குழி தொடர்பான தமது செயற்பாடுகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றும் சாலிய பீரிஷ் குறிப்பிட்டுள்ளார்.