இலங்கையின் அடுத்த சனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தான் தயாராக இருப்பதாக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவர், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நிறுத்தினால், தான் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.
தனது சகோதரர் பசில் ராஜபக்ச தேர்தலில் போட்டியிட மறுப்புத் தெரிவித்துள்ளார் எனவும், தமிழ் பேசும் மக்களும் கூட இந்தமுறை தனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் பொது பலசேனாவின் ஆதரவாளர் என்ற தவறான கருத்து இப்போது பொய்யாகியுள்ளது எனவும், எனவே முஸ்லிம்களும் தனக்கு வாக்களிப்பார்கள் எனவும், குறிப்பாக மகிந்த ராஜபக்சவுக்காக தமிழ் மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தான் இலங்கையின் அதிபராக தெரிவு செய்யப்பட்டால், ஒவ்வொரு குடிமகனும், அமைதியாகவும், கௌரவமாகவும் வாழுகின்ற நிலையை உறுதி செய்யவுள்ளதாகவும், தமிழர்கள் கவலைப்பட வேண்டியதில்லை எனவும், ஏனென்றால் மகிந்த ராஜபக்ச தனது குடும்ப வட்டத்துக்குள் தமிழ் உறவுகளைக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் மகிந்த ராஜபக்ச வடக்கு, கிழக்கில் முக்கியமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.