சிறிலஙகா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்று சனிக்கிழமை முற்பகல் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குடும்ப பெண்ணும், அவரது ஆறு வயது மகன் மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த குடும்ப பெண் நேற்றையநாள் தனது ஆறு வயது மகனுடன் வட்டுக்கோட்டை – கோட்டைக்காடு வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சைக்காகச் சென்று வீடு திரும்பும் போதே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இனம் தெரியாத கும்பல் அவர்களை வழி மறித்து இரும்பு கம்பிகள் உள்ளிட்டவையால் தலையில் தாக்கியதாகவும், குறித்த தாக்குதலில் குடும்ப பெண் தலையில் படுகாயமடைந்த நிலையில் அவ்விடத்தில் மயங்கி விழுந்துள்ளார் எனவும், அவரது ஆறு வயது மகன் மீதும் தாக்குதல் மேற்கொண்டதில் மகனும் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ள நிலையில், வீதியால் வந்தவர்கள் மயக்கமடைந்திருந்த குடும்ப பெண்ணையும் காயங்களுக்கு உள்ளான அவரது மகனையும் மீட்டு கோட்டைக்காடு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், குறித்த குடும்ப பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நாவற்குழியில் முகாமிட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினரால் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 24 இளைஞர்கள் காணமல் ஆக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு பதிவு செய்யப்பட்டு அது தொடர்பிலான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு உதவியாளராக குறித்த பெண் செயற்பட்டு வருகின்றார்.
கடந்த தவணையின் போதும் மனுதாரர்களை அச்சுறுத்தும் வகையில் நீதிமன்ற வளாகத்தினுள் அதிகளவான புலனாய்வாளர்கள் நடமாடினார்கள் என்று மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவர்கள் தனக்கு பாதுகாப்பு வழங்க வந்தவர்கள் என்று பிரதி சொலிஸ்டர் ஜெனரல் தெரிவித்திருந்தார்.
பாதுகாப்பு வழங்க எனில் அதில் மன்று தலையிட முடியாது எனவும், ஆனால் மனுதாரர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயலில் ஈடுபட்டால், அது தொடர்பில் எதிர் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலையே குறித்த வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளின் உதவியாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான குருபரன், சுபாஜினி மற்றும் திருக்குமரன் ஆகியோர் முன்னிலையாகி வருகின்றனர்.