தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை நடத்திவரும் சோதனைகளில் சுமார் 163 கோடி ரூபாய் பணமும் 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சாலைகள் மற்றும் பால ஒப்பந்தப்பணிகளை மேற்கொண்டுவரும் நிறுவனங்களில் ஒன்றான நாகராஜன் செய்யாதுரை என்பவருக்கு சொந்தமான ஸ்.பி.கே. குழுமமிடமும், குறித்த நபருக்கு சொந்தமான மேலும் பல நிறுவனங்களிடமும் இந்த சோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் கடுமையான வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வந்த தகவல்களையடுத்து 16ஆம் நாள் காலை ஐந்தரை மணி முதல், இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களிலும் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித் துறையினரின் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனைகளில் பத்து இடங்களில் இருந்து கணக்கில் வராத 163 கோடி ரூபாய் ரொக்கமும் 100 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
விசாரணையின்போது தாம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை ஒப்புக்கொண்டதோடு, கணக்குக்காட்டாமல் எப்படி இவ்வளவு சொத்துக்களை திரட்டினார் என்பதையும் ஒப்புக்கொண்டதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
அதேவேளை சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நாகராஜனக்குச் சொந்தமான இடங்களிலும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் இன்று செவ்வாய்க் கிழமையன்றும் இந்த சோதனைகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.