இலங்கையின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச 3 மாத காலத்துக்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் 36 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையை முறைக்கேடாக பயன்படுத்தியதாக, பசில் ராஜபக்சவிற்கு எதிராக கடுவலை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் அடிப்படையில் அவருக்கு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ம் நாள் முதல் நவம்பர் மாதம் 10ம் நாள் வரையில் அமெரிக்காவில் தங்கி இருக்க தம்மை அனுமதிக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்றில் பசில் ராஜபக்ச கோரி இருந்தார்.
பசில் ராஜபக்ச நாட்டில் இல்லாத காலப்பகுதியில் அவரது சட்டத்தரணி ஊடாக குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்றால், இந்த கோரிக்கைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்று சட்டமா அதிபர் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தினார்.
இதன்அடிப்படையில் இன்று அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு சிங்கபூருக்கு பயணமாகியுள்ளார் என்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன
அவர் நான்கு நாட்கள் சிங்கப்பூரில் தங்கவுள்ளதாகவும், இந்த பயணத்தில் கூட்டு எதிரக்கட்சியின் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.