வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உயிருடன் இல்லை என்று அரசு கூறியதின் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயமாக ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தில் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது எனவும், எனினும் இவர்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்றாவது கண்டு பிடிக்க வேண்டும் எனவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறப்பதற்கு முன்பாகவே, இலங்கையை ஆட்சி செய்கின்ற இரண்டு தலைவர்களான மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்ரமசிங்கவும் காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை என்ற கருத்தை ஏற்கனவே பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்று அரச தரப்பு தலைவர்களே கூறியதன் பிற்பாடு இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டதானது, உறவுகளுக்கு இந்த அலுவலகத்தில் நம்பிக்கையை இல்லாது செய்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கானாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகமானது, காணாமல் போனவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தன்னைப் பெறுத்த வரையில் இலங்கையை ஆட்சி செய்கின்ற ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, சிறிலங்கா சுதந்திர கட்சியாக இருந்தாலும் சரி, பௌத்த மதத்தை பாதிக்கும் விடயத்தையோ இராணுவத்தை பாதிக்கும் விடயத்தையோ செய்யப்போவதி்லலை எனவும், அப்படி இருக்கும் நேரத்தில் இராணுவம் செய்த குற்றங்களை விசாரித்து அவர்களுக்கு எப்படி தண்டனை வழங்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்படி தண்டனை வழங்கும் அதிகாரம் இந்த அலுவலகத்திற்கு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியள்ள அவர், அதே நேரத்தில் குறிப்பிட்ட இராணுவத்தை அழைத்து விசாரணை செய்யும் எந்த ஒரு அதிகாரமும் இந்த அலுவலகத்திற்கு இல்லாத போது, எப்படி மக்கள் இந்த அலுவலகம் தங்களுக்குத் தீர்வு தரும் என்று நம்புவார்கள் எனவும் வினவியுள்ளார்.
இல்ஙகை அரசால் இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம், அனைத்துலக சமூகத்தின் பார்வையிலிருந்து தாங்கள் தப்பித்துக் கொள்ளவே தவிர, உண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது என்று கண்டுபிடிப்பதற்கு இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.