பிரிட்டிஷ் கொலம்பியாவில் தீவிரமடைந்துவரும் காட்டுத்தீச் சம்பவங்கள் காரணமாக, காற்றில் புகை மாசு அதிகரித்துள்ளமை, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓகநாகன்(Okanagan) பிராந்தியத்தில் காட்டுத்தீ காரணமாக பல்வேறு குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் பல இடங்களில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த காட்டுத்தீ பரவல் காரணமாக அந்த பிராந்தியம் முழுவதும் கடுமையான புகைமூட்டத்தினால் சூழப்பட்டுள்ளதாகவும், அதனால் அங்குள்ள பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துகள் நிலைகுத்திப் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பீச் லான்ட்க்கும் சமர் லான்ட்க்கும்(Peachland – Summerland) இடைப்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 500 ஹெக்டேயர் நிலப்பரப்கை காட்டுத்தீ சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பல பிராந்தியங்களைச் சேர்நத மக்களையும் தத்தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று மதியம் வரையில் புதிதாக வேறு எந்த வெளியேற்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.