யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” என்ற நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி நடாத்திய புத்தளத்தை சேர்ந்த முஸ்லீம் இனத்தவரான ஜம்சீத் என்பவர் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது வீட்டிற்கு சென்ற புலனாய்வுத்துறையினர் வீட்டை படம் எடுத்ததுள்ளதுடன், குறித்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லாததால் அவரை புத்தள அலுவலகத்திற்கு அழைத்து வாக்குமூலம் ஒன்றினையும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாண அலுவலகத்தில் இருந்தே விசாரணைக்கான கட்டளை வந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே தாம் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாக அவரிடம் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கறுப்பு யூலை நினைவுநாளை முன்னிட்டு அவரது அடுத்த படைப்பான “கறுப்பு யூலையும் நெருப்பு ஈழமும்” நூல் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கறுப்பு யூலையின் 35ஆவது ஆண்டு எதிர்வரும் நாட்களில் நினைவுகூரப்படவுள்ள நிலையில், அதற்கான அழைப்பினை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு விடுத்துள்ளது.
1983 யூலை இனக்கலவரத்தினால் பெருமளவு தமிழர் வாழ்வு எரிந்து கருகியதுடன், அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சிறைச்சாலைக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதோடு, 2012ம் ஆண்டு வரை பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் சிங்கள இனவாதம் இன்னமும் தொடருகின்ற நிலையில், இதனை எதிர்ப்பதும், புதுயுகம் படைப்பதும் எமது வாழ்வின் கடமை என்றும், அந்த வகையில் இந்த கறுப்பு யூலை நினைவுகூரலில் ஒன்று சேருவோம் எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் குறித்த இந்த நினைவுகூரல் நிகழ்வு எதிர்வரும் 21ஆம் நாள் சனிக்கிழமை கொழும்பு மருதான டீனா வீதியில் அமைந்துள்ள சமய சமூக நிலையத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.