வர்த்தக போர் என்ற விடயம் தற்போது உண்மையாகிவிட்டது என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினாவில் ஜி 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சர் ப்ரூனோ லே மேரே, அமெரிக்காவின் அண்மையை வரி விதிப்புக் கொள்கையை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தன் நாட்டினை பற்றி மட்டுமே யோசிக்கும் வகையில், அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கை ஒருதலைபட்சமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தன்னை மட்டுமே யோசித்தால், அதன் அடிப்படையில் இந்த உலகில் வர்த்தகம் இயங்காது என்றும் குறிப்பிட்ட அமைச்சர் ப்ரூனோ, வருங்கால அனைத்துலக சந்தைக்கு இது ஒத்து வராது என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இருப்பது, வளர்ச்சியை குறைத்து, பலவீனமான நாடுகளை மிரட்டுவது போல உள்ளதாகவும், இதனால் அரசியல் ரீதியான பல விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் விபரித்துள்ளார்.
வர்த்தக போர் என்ற ஒன்று தற்போது உண்மையாகிவிட்டதாக குறிப்பிட்ட ப்ரூனோ, எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா திரும்பப் பெறாத வரை, அந்த நாட்டுடன் சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் கருதாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இதனை மறுத்த அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் நுசினும் கருத்த் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் சந்தைகளை திறந்து, போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.