இலங்கையின் மீளமைப்பு தொடர்பான முன்னேற்றம் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது எனவும், அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி சித்திரவதைகளும் தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு பயணம் செய்த ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்பு தொடர்பான அறிக்கையாளர் பென் எமர்ஸன், அங்கு பல தரப்பினரையும் சந்தித்திருந்த நிலையில், அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி த காடியன் செய்தித்தாள் இநத தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த இந்த அறிக்கையானது இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் கடுமையான அறிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ள காடியன் ஊடகம், அதில் நீதிப்பொறிமுறை தொடர்பில் உண்மையான முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் தமது பயணத்தின்போது இலங்கையின் அரசாங்க உறுப்பினர்கள், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் அநுராதப்புர சிறைச்சாலையின் உள்ளக அதிகாரிகள் ஆகியோரையும் சந்தித்திருந்தார்.
இதேவேளை சிறுபான்மையினர் இணைந்து இலங்கையில் கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்தபோதும், அந்த அரசாங்கத்தின் மீது தமிழ் சமூகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறது என்று எமர்சன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் பல ஆண்டுகளாக விசாரணைகள் இன்றி உள்ளனர் என்பதையும், பலர் தாம் சிறையில் இருக்கும் போது தமக்கு புரியாத மொழியில் எழுத்தப்பட்ட ஆவணங்களில் கையொப்பம் பெறப்பட்டதாக கூறுகின்றனர் என்பதையும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலரிடம் பாதுகாப்பு தரப்பினால் எதுவுமே எழுதப்படாத வெள்ளைக் கடதாசியில் கையொப்பம் பெறப்பட்டதாக சிறையில் உள்ளவர்கள் கூறுவதாக, ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்பு தொடர்பான அறிக்கையாளர் எமர்ஸன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைப்பதாக தெரிவித்து 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த இன்றைய அரசாங்கம் அந்த விடயத்தில் இதுவரை தோல்விக்கண்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.