சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஆகியோர் பிரபுதேவா – நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்திற்கு பாட்டு பாடியிருக்கிறார்கள்.
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கும் ‘பார்ட்டி’ படம் விரைவில் வெளி வர உள்ளது. இதை தொடர்ந்து அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “சார்லி சாப்ளின் 2”
இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.
முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் டி.சிவா முக்கிய வேடத்திலும், கெளரவ வேடத்தில் வைபவ்வும் நடிக்கிறார்கள்.
ஷக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘இது முதல் பாகம் மாதிரியே கலகலப்பான படம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஜோடி முதன் முறையாக சினிமாவில் பாடிய “சின்ன மச்சான் செவத்த மச்சான் சின்ன புள்ள செவத்த புள்ள” என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது.
இந்த பாடல் செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம் நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பாப்புலரான பாட்டை அவர்களை வைத்தே சினிமாவில் பாட வைத்தோம். அவர்கள் திரைக்காக முதன்முதலாக பாடியது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் காட்சியில் பிரபுதேவா நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப்பாடிய பாடல் காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. சூப்பர் ஹிட் பாடலாக இது பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் இயக்குனர். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.