மேகதாது அணை திட்டத்திற்கு நயவஞ்சகமாக அனுமதி பெற கர்நாடக அரசு முயற்சிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
காவிரியில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை திட்டமானது காவிரி பாசன மாவட்டங்களின் வாழ்வாதாரங்களை சிதைக்கும் நோக்கம் கொண்டது என்றும், இந்த சதிவலையில் தமிழகம் சிக்கிவிடக் கூடாது என்பதுடன், குறித்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தமிழகத்துக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக அமையாது என்றும், மாறாக அது பாதகமாகவே அமையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் அண்மையில் கொட்டிய தொடர்மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலான தண்ணீர் திறந்துவிடப்பட்டது என்றும், இந்த நிலையில் மேகதாது அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால், தமிழகத்துக்கு அந்த அளவு நீர் திறந்து விடப்பட்டிருக்க மாட்டாது என்றும் அன்புமணி ராமதாஸ் விபரித்துள்ளார்.