இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங், சுமார் 4800 கோடி ரூபாவை கொடையாக வழங்கியுள்ளார்.
இந்த நிதியை நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டத்துக்கு வழங்குவதற்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அதிபரின் விருப்பப்படி, ஏதாவது திட்டத்தை தெரிவு செய்து செலவிடுவதற்கு சீன அதிபர் இந்தக் கொடையை வழங்கியுள்ளார்.
பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் நடந்த, சீனாவின் உதவியுடன் அமைக்கப்படும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போதே இலங்கை அதிபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மருத்துவமனைத் திட்ட தொடக்க நிகழ்வு குறித்த பேச்சுக்களுக்காக இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தனது பணியகத்துக்கு வந்த சீனத் தூதுவர் செங் ஷியுவான், சீன அதிபரின் இந்த கொடை பற்றித் தெரியப்படுத்தியதாகவும், இந்தக் கொடையைப் பயன்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறும் சீனா கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி முழுத் தொகையையும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், வீடுகளை அமைக்கப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான திட்ட அறிக்கை சீனாவிடம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என்றும், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மில்லியன் ரூபா செலவிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கு சீனா 7.6 மில்லியன் டொலரை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனாவின் இந்த கொடை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.