நேற்று இரவு பத்து மணியளவில் ரொரன்ரோ Greektownஇல், Danforth avenue மற்றும் Logan avenue பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கி தாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி தாரியைத் தவிர்த்து, பெண் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும், இதன்போது படுகாயமடைந்த எட்டு அல்லது ஒன்பது வயது சிறுமி ஒருவர் உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாககிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த வன்முறைக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகினற்னர்.
அவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் ஏதாவது தகவல் அறிந்தோர், அல்லது காணொலிப் பதிவுகளை வைத்திருப்போர் உடனடியாக தங்களுக்கு அவற்றைத் தெரியப்படுத்துமாறு ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரி மார்க் செளன்டர்ஸ் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என்ன காரணத்தினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்ப்டடது என்பது இன்னமும் தமக்குத் தெரியவில்லை எனவும், அனைத்து சாதக காரணிகளையும் கருத்தில் எடுத்து விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் போது காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட போதிலும், துப்பாக்கிதாரி எவ்வாறு மரணித்தார் என்ற தெளிவான விபரங்கள் கிடைக்கவில்லை எனவும், எனினும் இதன்போது காவல்துறையினர் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தினை அடுத்து, விசாரணை நடவடிக்கைகளுக்காக Danforth Avenueவில், Pape avenueவில் இருந்து Broadview avenue வரையிலான பகுதிகள் மூடப்பட்டுளளதுடன், இன்று திங்கட்கிழமை மதியம் வரையில் அது மூடப்பட்டிருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.