இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு யூலையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் கடைப்பிடிக்கும் கனேடிய மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் இணைந்து கொள்வதாக பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.
கறுப்பு யூலை நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவர், 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களை இந்த நாளில் நாம் நினைவு கூருகிறோம் என்பதையும், அப்போது ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்டதுடன், பலர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கறுப்பு யூலையில் தமது குடும்பங்கள் மற்றும் நண்பர்களை இழந்தவர்களை நினைவு கூரும், தமிழ் கனேடியர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்துடன் தாமும் இணைந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கறுப்பு யூலை ஒரு அழிவு வாரமாக இருந்தது என்பதையும், கொடூரமான இந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக, பல பத்தாண்டுகளாக பதற்றம் அதிகரித்தது என்பதையும், ஆயுத மோதல்களின் விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பதுடன் பலரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்பதையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வன்முறைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், 1983ஆம் ஆண்டு செப்ரெம்பரில் கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை நடைமுறைப்படுத்தியது எனவும், அதன் மூலம் 1,800இற்கும் அதிகமான தமிழர்களுக்கு கனடாவில் பாதுகாப்பும் சுதந்திரமும் கிடைத்தது என்பதையும் நினைவுகூர்ந்துள்ள அவர், கனடா நாட்டிற்கு மிகுந்த பங்களிப்பை வழங்குவதற்காக அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
2009இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த போதிலும், நல்லிணக்கச் செயல்முறைகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன எனவும், நிலையான அமைதி மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெற்ற அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறை உள்ளிட்ட நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக, இலங்கை அரசாங்கத்துடனும் சிவில் சமூகத்துடனும் கனடா நெருக்கமாக பணியாற்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
கறுப்பு யூலையில் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு, கனேடிய அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொள்வதாகவும், அத்துடன் இலங்கையில் பொறுப்புக்கூறல், அர்த்தமுள்ள நல்லிணக்கம், நிலையான அமைதி, செழிப்பு என்பனவற்றை உள்ளடக்கிய எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்த்திருப்பதாகவும் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ மேலும் தெரிவித்துள்ளார்.