இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு யூலை நினைவு நாள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் நாள் திருநெல்வேலியில் 13 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்காணோர் காயப்படுத்தப்பட்டதுடன், தமிழர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சிங்களக் காடையர்களால் எரித்து அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டன.
அத்துடன் தென்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு, அகதிகளாக வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈழத் தமிழரின் வரலாற்றின் முக்கியமான திருப்பு முனையாகவும், அழிக்க முடியா வரலாற்றுப் பதிவாகவும் அமைந்த கறுப்பு யூலை நினைவு நாள் இன்று நினைவு கூரப்படுகிறது.
இதனை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏற்றி அகவணக்கம் செலுத்தியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கறுப்பு யூலை இனக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவுகூரப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் “கறுப்பு யூலையும் கற்றுக்கொள்ளாத பாடமும்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில், காங்கேசன்துறை வீதி, கொக்குவில் சந்தி என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
பிரபல எழுத்தாளரும், பொறியியலாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான சாந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில், கருத்துரையினைப் புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளரும், இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளருமான பிரதீபன் ஆற்றவுள்ளார்.
இக்கருத்துரைகளைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.