மாகாண சபைத் தேர்தலைத் தாமதப்படுத்தாமல் உடனடியாக நடாத்த வேண்டும் எனவும், மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என்றும், எல்லை நிர்ணயம் மீள் திருத்தம் செய்யப்படல்வேண்டும் என்பதாலும், அதற்கு அதிக காலம் தேவை என்பதாலும், பழைய முறைமையின் அடிப்படையில் உடன் தேர்தலை நடத்தவேண்டும் என்றும் இலங்கையின் இவ்வாறு சிறுபான்மைக் கட்சிகள் ஒன்று கூடி தீர்மானம் எடுத்ததுள்ளன.
இந்தத் தீர்மானத்தை எதிர்வரும் வியாழக்கிழமை கூடவுள்ள தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிறப்புக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்துரைக்கவும் அவை முடிவு செய்துள்ளன.
மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பான சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையிலான முக்கிய கூட்டம் நேற்றுத் திங்கட்கிழமை இலங்கையின் தேசிய நல்லிணக்க சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது மாகாண சபையின் புதிய தேர்தல் முறைமையின் பாதகமான தன்மை குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்துரைக்க வேண்டிய விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன.
அதன்போதே புதிய தேர்தல் முறைமையை ஏற்க முடியாது எனவும், குறித்த முறைமை சிறுபான்மை இனத்தவர்களுக்குச் சாதகமானதல்ல என்றும், தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்தை ஏற்க முடியாதது எனவும், ஆகவே எல்லை நிர்ணயம் மீண்டும் செய்யப்படவேண்டும் எனவும், அதற்கு அதிகளவில் காலம் தேவையாகும் என்பதனால் அதுவரை சனநாயக உரிமையான தேர்தலை பிற்போட முடியாது எனவும் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பழைய முறைமையின் அடிப்படையில் உடன் தேர்தலை நடத்தவேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று புதிய முறைமையின் அடிப்படையில் தேர்தலை நடத்தினால், உள்ளூராட்சி மன்றங்களைப் போன்று மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் எனவும், அவ்வாறு செய்யதால் மக்கள் மத்தியில் அதீத பாரத்தைச் சுமத்துவது போன்று ஆகிவிடும் என்றும், ஆகவே மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படக் கூடாது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.