காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை அனைத்துலக அளவில் கொண்டு செல்லும் நோக்கில், வலிந்து ‘காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்’ உருவாக்கப்பட்டிருப்பதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது போராட்டம் சங்கமாக மாறியமை போராட்டத்தை நலிவடையச் செய்யும் செயற்பாடு அல்ல எனவும், மாறாக போராட்டத்தை அனைத்துலக மட்டத்தில் கொண்டு செல்லும் நோக்கில் அதன் வடிவம் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
போரின் போது காணாமல்போனவர்களின் உறவுகள் கடந்த 500 நாட்களுக்கு மேலாக வீதியில் இருந்து போராடி வருகின்ற நிலையில், நேற்றையநாள் முல்லைத்தீவில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க காரியாலயமொன்றை திறந்துவைத்தனர்.
சிறில்ஙகா இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள் உள்ளிட்ட பல காணாமல்போனவர்கள் தொடர்பில் நீதி வேண்டி இலங்கை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே போராட்டங்களை ஆரம்பித்திருந்ததாகவும், இதனால் வீதிகளுக்கு அருகில் கொட்டகைகளை அமைத்து போராட்டத்தை முன்னெடுத்து வந்தததையும் அவர்க்ள சுட்டிக்காட்டியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோரை இலங்கை சனாதிபதி இரண்டுற்கும் மேற்பட்ட தடவைகள் சந்தித்துள்ள போதிலும் அவர் எந்த பதிலையும் வழங்கவில்லை எனவும், அது மாத்திரமன்றி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை ஒலிக்கச் செய்தனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு கிடைத்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டத்தை அடுத்தக்கட்டமாக அனைத்துலக மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கிலேயே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் உருவாக்கப்பட்டு அதற்காக அலுவலகமொன்றும் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அலுவலகம் திறக்கப்பட்டது போராட்டத்தை நலிவடையச் செய்யும் நோக்கில் அல்ல எனவும், மாறாக அனைத்துலக ரீதியில் எமது முறைப்பாடுகளைப் பதிவுசெய்து அவற்றுக்கு நீதி கோரும் போராட்டமாகத் தொடரும் எனவும் அவர்கள் விபரித்துள்ளனர்.
இந்த அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உருவப்படங்கள் ஒட்டப்பட்டு அவர்களின் விபரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.