ஈரானை அமெரிக்கா தாக்கினால், அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என்று ஈரானின் சிறப்பு படை தளபதி காசிம் சோலிமனி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ஈரானின் செய்தி நிறுவனமான டாஸ்னிம் வெளியிட்டுள்ள இது தொடர்பான செய்தியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும் என்று மேஜர் ஜெனரல் கசிம் சபதம் ஏற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இனி எந்தக் காலத்திலும் அமெரிக்காவை மிரட்டக்கூடாது என்றும், இதையும் மீறி மிரட்டினால், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்க அதிபர் தெரிவித்ததை தொடர்ந்து ஈரானின் இந்த எச்சரிக்கை விடுக்க்பபட்டுள்ளது.
அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதுடன், ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளையும் தொடங்கி உள்ளதை அடுத்து இரண்டு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகள் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து ஈரான் மீது இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்க்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.