உத்தேச புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டுவிட்டதாக அண்மையில் தவறான தகவல் வெளியாக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசியலமைப்பு சபையினால் நேற்றையநாள் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கையில், அரசியலமைப்பு வரைவை தயாரிப்பதற்கான கட்டளை அரசியலமைப்பு சபையினால் வழிநடத்தல் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்த உத்தேச புதிய அரசியலமைப்பு வரைவு இதுவரை தயாரிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிகளுக்காக அரசியலமைப்பு சபையினால் கடந்த 2016 ஆம் ஆண்டு, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூகவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது எனவும், வழிநடத்தல் குழுவுக்கு ஆவணம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கான தொழிநுட்ப மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்குவதே இந்தக் குழுவின் முக்கிய பணியாகும் என்றும் அது விபரித்துள்ளது.
இதற்கமைய குறித்த ஆவணமானது, வழிநடத்தல் குழுவின் இறுதி சுற்று கலந்துரையாடலுக்கான அடிப்படையை உருவாக்கும் என்று அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் ஆறு உப குழுக்களான அடிப்படை உரிமைகள், நீதித்துறை, நிதி, பொதுச்சேவைகள், மத்திய உறவுகள் மற்றும் சட்டம் மற்றும் ஆணை ஆகியவற்றின் அறிக்கைகளையும், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்பனவற்றையும் அடிப்படையாகக் கொண்டு குறித்த ஆவணம் அமையும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 18ஆம் நாள் இறுதியாக இடம்பெற்ற வழிநடத்தல் குழுவின் கலந்துரையாடலின் போது, நிபுணர்கள் குழுவினால் இரண்டு ஆவணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதனை வழிநடத்தல் குழு கவனத்தில் எடுத்துள்ளது எனவும், இதேநேரம் நிபுணர்கள் அனைவரும் இணைந்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தனியான ஒரு ஆவணத்தை தயாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழிநடத்தல் குழுவின் அடுத்த அமர்வுக்கான நாள் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.