திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் அவரைக் கவனித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோபாலபுரத்திலுள்ள கருணாநிதி வீட்டிற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்றும், தொலைபேசி ஊடாகவும் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்துள்ள நிலையில், அவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
கருணாநிதிக்கு சிறப்பான மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து அவரது வார்த்தைகளாலே நன்றி சொல்வார் என்றும் ஸ்டாலின் தமது கீச்சகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.