மாகாண அரசுகளுக்கு காணி காவல்துறை அதிகாரங்களை வழங்கககூடாது எனவும், அது பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்றும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அடுத்த சனாதிபதித் தேர்தலில் மகிந்த அணி சார்பில் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த கோத்தபாய, நேற்று தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து உரையாடி இருந்தார்.
இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்றிருந்த நிலையில், இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தான் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு காணப்போவதாகவும், பொருளாதார பிரச்சினை காரணமாகவே முப்பதாண்டு ஆயுதப் போராட்டம் நடந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக்கடன் பெற்றதாக தம்மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும், வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யவே தான் வெளிநாட்டுக்கடன் பெற்றாகவும் அவர் கூறியுள்ளார்.
மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கினால் முதலமைச்சர் தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிடுவார் என்றும், பின்னர் அதனை கொழும்பு அரசினால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு முதலமைச்சர் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், இலங்கையில் சிங்கள இராணுவம் இல்லை என்றும், தேசிய இராணுவமே காணப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு இராஜபக்சகளுக்கு எதிராகவே தயாரிக்கப்படுவதாகவும், இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கப்படுவதாகவும் கூறிய கோத்தபாய ராஜபக்ச, புதிய அரசியலமைப்பு பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்தாத வகையில் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.