ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பாகவே காணப்படுகின்றது என்று வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு சனாதிபதி தேர்தலில் வெற்றிவாகை சூடலாம் என்ற மமதையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபகச தமிழ் மக்களின் ஆதரவினை பெற சனநாயகம் பற்றி பேசுகின்றார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ. நா மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பாகவே காணப்படுகின்றது எனவும், கடந்த காலத்தில் இடம்பெற்ற வன்கொடுமைகளை தமிழ் மக்களால் மறக்க முடியாது என்றும், இன்றும் பல விடயங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்திடம் போலியான அபிவிருத்திக்களை நாம் கோரி நிற்கவில்லை என்பதுடன், நிரந்தரமான உரிமைகளை மாத்திரமே கேட்டு நிற்கின்றோம் என்பதை தெற்கு அரசியல்வாதிகள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம் வடக்கு அரசியல்வாதிகள் தொடர்பில் விமர்சனங்களை தெரிவிக்கும் உரிமையும் இவர்களுக்கு கிடையாது எனவும், வடக்கு மக்களின் அரசியல் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தெற்கு அரசியல்வாதிகள் வடக்கிற்கு வந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும், வடமாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியல் செய்ய முற்படுகின்றமை நகைப்புக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
உண்மை என்ன என்ற விடயத்தை அறிய முடியாத மூடர்கள் அல்ல தமிழர்கள் எனவும், அரசாங்கம் மாறினாலும் எங்களது கோரிக்கை என்றும் மாறாது என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.